அச்சுக்கலை நுட்பத்தின் வளர்ச்சி நிலை
அச்சுகலை நுட்பங்கள் காலத்திற்கு காலம் பல்வேறு பரிமாணங்களை அடைந்துள்ளன.
அச்சுக்கலை என்பது, அச்சிடுவதற்கான உரைப்பகுதி கற்பதற்கும், அடையாளம் காண்பதற்கும்
கவர்ச்சியானதாக இருக்கும் வகையில் அச்செழுத்துக்களை ஒழுங்குபடுத்தும் ஒரு கலையும்
தொழில்நுட்பமும் ஆகும். அச்செழுத்துக்களை ஒழுங்குபடுத்துவதானது, அச்செழுத்துக்கள்,
எழுத்துக்களின் அளவு, வரியொன்றின் நீளம், வரிகளுக்கு இடையிலான இடைவெளி என்பவற்றைத்
தெரிவு செய்தல் சொற்களுக்கு இடையிலான இடைவெளிகளைச் சரிசெய்தலுடன், எழுத்துக்களுக்கு
இடையிலான இடைவெளிகளைச் சரிசெய்தல் போன்றவற்றையும் உள்ளடக்கும். அச்செழுத்துக்களை
வடிவமைத்தல் இக்கலைக்கு நெருக்கமான ஒரு கலை. சிலர் இது அச்சுக்கலையினிறும்
வேறுபட்டது என்பர். வேறு சிலர் இது அச்சுக்கலையின் ஒரு பகுதி எனக் கருதுவர்.
பெரும்பாலான அச்சுக்கலைஞர்கள் அச்செழுத்துக்களை வடிவமைப்பதில்லை என்பதுடன்,
அச்செழுத்துக்களை வடிவமைப்பவர்கள் தம்மை அச்சுக்கலைஞர்களாகக் கருதுவதில்லை.
இக்கலையை அச்சு அமைப்பாளர்கள், அச்சுக் கோப்பாளர்கள், அச்சுக் கலைஞர்கள், வரைய
வடிவமைப்பாளர்கள், கலை இயக்குநர்கள், காமிக் புத்தகக் கலைஞர்கள், சுவரெழுத்துக்
கலைஞர்கள் மற்றும் எழுத்தர் வகைப்பணியாளர்கள் கைக்கொள்ளுகின்றனர். எண்ணிமக் காலம்
வரை அச்சுக்கலை ஒரு சிறப்புத் தொழிலாகவே இருந்தது.எண்ணிமமாக்கம் புதிய தலைமுறைக்
காட்சிய வடிவமைப்பாளர்கள் மற்றும் சாதாரண பயனர்களுக்கு அச்சுக் கலையைத்
திறந்துவிட்டது.இங்கிலாந்தில் உள்ள கோல்செசுட்டர் நிறுவனத்தின் வரைய
வடிவமைப்புத்துறைத் தலைவரான டேவிட் ஜூரி என்பவர், "அச்சுக்கலை என்பது தற்காலத்தில்
ஒவ்வொருவரும் கைக்கொள்ளுகின்ற ஒன்று" என்கிறார்.
ஆரம்ப காலத்தில் அச்சுத்தொழில்நுட்பம் வளர்ச்சியடையாத காரணத்தால் அம் மக்கள்
தமக்கு எழுத்துக்களையும் குறியீடுகளையும், முத்திரைகளையும் பலவகைகளிலும்
கற்களிலும் பாறைகளிலும் செதுக்கி வைத்தனர். களிமண் தட்டுக்களிலும் அச்சுக்கள்
பதிவு செய்யப்பட்டன. பிற்பட்ட காலத்தில் அச்சடிக்கும் முறை வழக்கிற்கு கொண்டு வரப்பட்டது. ஐரோப்பாவில் கையெழுத்துப் படிகள் அதிக வழக்கில் இருந்தன.இக்காலத்தில் அப்படிகளில் உள்ள எழுத்துக்களைப் போலவே உலோக அச்சில் வடிவமைத்தனர்.
அந்த எழுத்துக்களை வார்த்து அச்சடிக்கும் முறை வழக்கிற்குக் கொண்டுவரப்பட்டது.
15ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் கையால் எழுதப்பட்ட எழுத்துகளையே மாதிரியாகக்
கொண்டு அச்சு உருவாக்கி நூல்களை வெளியிட்டனர். இம்முறையால் கையெழுத்திற்கும்
அச்சிற்கும் வேறுபாடு காணப்படவில்லை. ஜான் கூட்டன்பர்க் எனும் ஜெர்மானியர்
முதன்முதலில் ஐரோப்பாவில் தனித்தனி உலோக எழுத்துகளை 1437இல் உருவாக்கி,
அச்சுப்பொறியையும் கண்டுபிடித்தார். இதனால் இவர் ‘அச்சுக்கலையின் தந்தை’ என்று
போற்றப்படுகின்றார். தனித்தனி எழுத்துக்களைக் கொண்டு ‘விவிலிய நூல்’ முதன்முதலில்
தோலாலான தாளில் அச்சிடப்பட்டது. இந்நூலில் ஒரு பக்கத்திற்கு 35 வரிகள் இருந்தன.
இவரது அச்சு இயந்திரம், வேலையை எளிதாக்கி அதிகப் படிகள் எடுக்க உதவியது.
கூட்டன்பர்க்கின் மாணவரான நியூ மெரிஸ்டர் என்பவர் பல நாடுகளில் அச்சுத் தொழில்
முன்னேறக் காரணமாக இருந்தார். அச்சுப் பெருக்கத்தால் பல்துறை நூல்கள்
அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டன. நூல்நிலையங்கள் தோன்றின. இது உலகளாவிய தொழிலாக
மாறியது. காலத்திற்கு காலம் அச்சுப்பொறி பல்வேறு பரிமாணங்கள் அடைந்துள்ளன. அவற்றை
நோக்குவோம். தட்டை அச்சுப்பொறி ( platen press) ஜி.பி ஜோரிடன் என்பவர் 1805 ல்
தட்டை அச்சுப்பொறியை கண்டுபித்தார். 1806 ஜார்க் கிளிமர் என்பவர் ஒரு நெம்பு கோலை
பயன்படுத்துவதன் மூலம் மேலும் கீழும் அசைந்து அழுத்தம் கொடுக்கும் தத்துவத்தில்
அமைந்த பொறியை கண்டுபிடித்தார். உருளை அச்சுப்பொறி 1814 ல் பிரடரிக் கோயிங்
என்னும் பெயருடைய ஜேர்மனியர் தான் கண்டுபிடித்த நீராவி விசையால் இயக்கப்படும்
பொறியில் அழுத்தம் கொடுக்கும் உருளை ஒன்றை பயன்படுத்தினார். அச்சுப்பொறியில்
உருளையை பயன்படுத்தலாம் என்ற இவரது கண்டுபிடிப்பு அச்சுத்துறையில் பெரும்
புரட்சியை ஏற்படுத்தியது. பின்நாட்களில் தோன்றிய அச்சுக்கலைகளிற்கும் இவ் உருளை
அச்சுப்பொறியே அடித்தளம் இட்டன. பிற்பட்ட காலப்பகுதியில் தோன்றிய அச்சுக்கலைகளாக
எழுத்தச்சு முறை( letter press printing ), மறுதோன்றி அச்சு( offset printing ),
குடைவு அச்சு (Gravure printing ), நெகிழி அச்சு ஆகியவற்றிற்கு இவையே அடித்தளமாக
அமைந்தன. வரி எழுத்துப் பொறி( lino type machine ) கி.பி 1886 ல் அமெரிக்க ஐக்கிய
நாட்டை சேர்ந்த ஆட்மார் மெர்ச்சன்தலர் முழுமையாக ஒரு வரியை அடுக்கி கொடுக்கும்
வகையிலான எழுத்து வரிக் கோர்ப்பு முறையை கண்டுபிடித்தார். இக் கண்டுபிடிப்பு
ஒவ்வொரு எழுத்தாக கோர்த்துக் கொண்டிருக்கும் நிலையை மாற்றி ஒரு மணிக்கு 30000
மேற்பட்ட எழுத்துக்களை கோர்க்க முடியும் என்ற நிலையை உருவாக்கியது. மறுதோன்றி
அச்சுப்பொறி (offset printing ) அமெரிக்காவை சேர்ந்த ரா வாசிங்டன் ரூபில் என்பவர்
நெகிழி விரிப்பு உருளையை பயன்படுத்தி தெளிவாக அச்சடிக்கும் முறையை
கண்டுபிடித்தார். சுழல் அச்சுப்பொறி ( Rotary offset press) தொடர் காகித ஓட்ட
சுழல் அச்சுப்பொறி முதன்முதலாக 1912 ல் 70 செ.மீ அகலமுள்ள தொடர் காகித உருளையைக்
கொண்டதாக ஓட ஆரம்பித்தது. தாளின் இரண்டு பக்கங்களிலும் ஒரே நேரத்தில் அச்சாகும்
வண்ணம் இரண்டு நெகிழி விரிப்பு உருளைகளைக் கொண்டதாக நெகிழி விரிப்பு உருளைகள்
ஒன்றுக்கொன்று அழுத்தம் கொடுத்துக் கொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்பட்டதாக இந்த
தொடர் காகித ஓட்ட அச்சுப்பொறி தயாரிக்கப்பட்டது.
இவ்வாறு அச்சுக்கலையானது காலத்திற்கு காலம் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளமையை
அவதானிக்க முடிகிறது. எமது சூழலில் அச்சுக்கலையானது பல்வேறு தேவைகளிற்காக பல்வேறு
அச்சுத் தொழில்நுட்பமானது பயன்படுத்தப்படுகிறது. ஒரு மனிதனின் மூளையில் உருவாகி
இன்னொரு மனிதனால் எந்தவித மறுப்புமின்றி ஏற்றுக் கொள்ளக் கூடியது எதுவோ அதுவே
உண்மையான கருத்து இவ்வாறான கருத்துக்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு
பரப்புவது தான் அச்சுக்கலையாகும். ஒரு மனிதனின் சந்ததி பற்றி அறிந்து கொள்ள
பயன்படுவதே இன்றைய வண்ண அச்சு ஆகும். இது எமது சூழலில் பயன்படும் ஓர் அச்சுக்கலை
ஆகும். எமது சூழலில் பத்திரிகை நிறுவனங்களில் தட்டச்சு முறை பயன்படுவதையும்
அவதானிக்க முடிகின்றது. இன்றைய நவீன உலகின் உடனடி அச்சுத் தேவையை நிறைவு செய்யும்
முறையாக டிஜிட்டல் பிரிண்டிங் ( digital printing ) பயன்படுத்தப்படுகிறது.
கணிப்பொறியால் வடிவமைக்கப்பட்ட ஒரு தொகுப்பை இருபதே நிமிடங்களில் பயனாளி பெறும்
வண்ணம் டிஜிட்டல் பிரிண்டிங் முறை வளர்ச்சி பெற்றுள்ளது. இவ்வாறாக எத்தனையோ
பரிமாணங்களை பெற்று வளர்ந்து வந்துள்ள அச்சுக்கலை இன்னும் பல மாற்றங்களையும்
வளர்ச்சிகளையும் அடையும் என்பதில் ஐயமில்லை.
Comments
Post a Comment