முடியாது
ஒரு காரியத்தை செய்யும் முன்பு அதனை நாம் செய்ய முடியாது என்று முடிவெடுத்தால் நாங்கள் போகின்ற பாதையின் தொடக்கத்திலேயே அப் பாதையின் கதவை இறுகச் சாத்தி விடுகின்றோம். அதற்கு பதிலாக முடியும் என்று எண்ணி விட்டாலே நமது பாதை தானாக வழி விடும்.
சிலர் ஆசைப்படுவதுண்டு அது அவர்களின் மேலெழுந்த வாரியான நினைப்பு ஏன் தெரியுமா? அது அவர்களிற்கு நடக்காது என்று தெரியும். அவர்களது மனதில் நடக்காது என்ற எண்ணம் இருந்தால் எப்படி அது சாத்தியமாக முடியும். இதே ஆசையில் நியாயம் இருந்தால் நம் மீது திடமான நம்பிக்கை இருந்தால் முழுமையான ஈடுபாடு இருந்தால் எமது ஆசை இலட்சியமாக மாறிவிடும்.
எப்பொழுதும் எமது மனதில் பலவீனத்தை வளரவிடக் கூடாது. அப் பலவீனம் எமது பலத்தை வேரறுத்து விடும். எங்களுடைய முயற்சி பயனளிக்கவும் , நம்பிக்கை தழைத்து செழிக்கவும் நாம் பலவீனத்திற்கு எதிராக போராட வேண்டும். வேலைப்பளுவை கடினமாக எண்ணிவிடக் கூடாது. அது மனத்தை பொறுத்தது.
வேலையை திட்டமிட்டு சிறுகச் சிறுக செய்வதன் மூலம் வெற்றி அடைய முடியும். ஒருபோதும் விரக்திக்கு உள்ளாகக் கூடாது. அதன் மத்தியில் நின்று முயற்சியை தொடர வேண்டும். அப்பொழுது தான் தன்னம்பிக்கையும் மனத்தின்மையும் எமக்கு கிடைக்கிறது.
சாதனை படைத்த பெரியோர்கள் தங்கள் வாழ்க்கையில் எவ்வளவோ பெரிய சோதனைகளையும் தாண்டி சாதனை படைத்தவர்களே. அவர்களது மனவலிமையும், விடாமுயற்சியும் மட்டுமே அவர்களை வெற்றிப் பாதைக்கு கொண்டு வந்தன.
ஒரு மனிதனுக்குள்ள சிறப்பான தன்மையே அவன்/ அவள் செயற்படக் கூடியவர் என்பது தான். எங்களது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பை தேடுவது அவசியமாகும். வாய்ப்புகள் எங்களை தேடி வரும் என்று எண்ணாதீர்கள். அதற்காக காத்திருக்காதீர்கள். நாம் வாய்ப்புகளை தேடிச் சென்று கண்டுபிடித்து செயற்பட வேண்டும். எனவே ஒரு காரியத்தை தொடங்கும் போது அது எம்மால் செய்து முடிக்க முடியும் என்று எண்ணினாலே போதும் அந்தக் காரியம் அனேகமாக முடிந்த மாதிரி தான்.
" உங்களை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் " என்றார் சாக்கிரடீஸ் .தன்னை அறிந்து கொள்ள முடியாத மனிதன் எதிலும் வெற்றி அடைய முடியாது. எனவே எக்காரியத்தை செய்யும் முன்பும் இது எம்மால் முடியும் என்ற முழுமனதுடனும் விடாமுயற்சியுடனும் செயற்படுவோமானால் அக் காரியம் எமக்கு வெற்றி அளிப்பது உறுதி ஆகும்.

Comments
Post a Comment