யாழில் அதிகரித்து வரும் மோட்டார் வாகன விபத்து
யாழில் அதிகரித்து வரும் மோட்டார் வாகன விபத்து
யாழ்ப்பாண பிரதேசத்தில் அதிக அளவிலான மோட்டார் வாகன விபத்துக்கள் இளைஞர்கள் மூலமாகவே இடம்பெற்று வருவதை நாளாந்தம் பத்திரிகைகள், சமூக ஊடகங்கள் போன்றவற்றின் மூலம் பார்வையிட்டுக் கொண்டிருக்கின்றோம் .
மோட்டார் வாகன வீதி விபத்தானது போதைப் பொருள் பாவனைகள், சாலை விதிமுறைகளை மீறுதல் போன்றவற்றின் மூலம் இடம்பெறுகின்றது. அந்தவகையில் தற்கால இளைஞர்கள் சமூகப் பார்வையை தமது பக்கம் ஈர்ப்பதற்காகவும் அவசர தேவைகளுக்காகவும் வீதி விதிமுறைகளை மீறி சாலைகளில் கடுகதியில் செல்கின்றனர் . இதன் காரணமாக அவர்களும் வீதியில் செல்பவர்களும் பாதிப்புக்குள்ளாகின்றனர் . வீதி விபத்துக்களினால் ஒவ்வொரு 24 மணித்தியாலத்திற்கும் 8 பேர் இறக்கின்றனர் என News 1st (2 Jan, 2022) மூலம் அறிய முடிகின்றது. உதாரணமாக யாழ் பிராந்தியப் பத்திரிகையில் வெளியான முதற் பக்கச் செய்தியாக "மோட்டார் வாகனத்தில் கடுகதியில் சென்ற இளைஞர் பலி " மற்றும் "மோட்டார் வாகனம் மோதியதில் குடும்பப்பெண் பாதிப்பு " இவ்வாறான செய்திகளை தினமும் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. மேலும் போதைப் பொருள் பாவனையும் முக்கிய காரணமாக அமைகிறது . உதாரணமாக "மதுபோதையில் மோட்டார் வாகனம் செலுத்திய இளைஞர் டிப்பருடன் மோதி பலி " போன்ற செய்திகளின் மூலம் யாழ்ப்பாணத்தில் மோட்டார் வாகன விபத்துகள் அதிகம் இடம்பெறுவதை நாம் அவதானிக்க முடிகிறது.
நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப வேண்டிய இளைஞர்கள் மோட்டார் வாகன விபத்து காரணமாக முடங்கிப் போகும் நிலைமையை காணமுடிகின்றது. இதன் மூலம் அவர்களும் அவர்களது குடும்பமும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுவதோடு இன்னொருவரின் கையில் தங்கி இருக்க வேண்டிய நிலையும் ஏற்படுகின்றது. இந்த நிலைமையானது சமூக மற்றும் நாட்டின் அபிவிருத்தியில் பாரிய பாதிப்பையும் ஏற்படுத்துகின்றது.
இத்தகைய வீதி விபத்திற்கான தீர்வாக வீதி விதிமுறைகளைப் பின்பற்றுதல். கடுமையான சட்டங்களை கொண்டு வருதல், இளைஞர்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், போக்குவரத்தின் போது மதுபாவனை பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்தல் , வேகத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருதல், மற்றும் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தல் போன்றவற்றின் மூலம் இவ்வாறான விபத்துக்களை குறைத்துக் கொள்ள முடியும் .
இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரையில் சமூக, பொருளாதார ரீதியில் விருத்தி அடைந்த மாவட்டமாக இருந்த போதிலும் மோட்டார் வாகன வீதி விபத்து என்பது அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. வீதி விபத்தை தடுப்பதற்கான முறையான பாதைகளை அமைத்தாலும் கடுமையான சட்டங்களை பின்பற்றினாலும் உயர்தர தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினாலும் மோட்டார் வாகன வீதி விபத்தானது யாழ்ப்பாணத்தை பொறுத்தவரையில் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது . அந்தவகையில் உயிர்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பொருட்டும் வீதி விபத்து தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டும் யாழ் மாவட்டத்தில் அதிகரித்துவரும் மோட்டார் வாகன வீதி விபத்தில் இருந்து தப்பித்து கொள்வதற்கு கடுமையான சட்டங்களை பின்பற்ற வேண்டும் என்பதே இதன் அடிப்படையாகும் .
தகவல் மூலங்கள்
Comments
Post a Comment